
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள்
செய்தி முன்னோட்டம்
ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஜனவரி மாதம் 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் தமிழக அரசால் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, தென்மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அண்மையில் அறிவித்தது.
அதன்படி, தாம்பரம்-நெல்லை, நெல்லை-சென்னை எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில், நாகர்கோவில்-தாம்பரம், திருவனந்தபுரம் கொச்சுவேலி-தாம்பரம் என மொத்தம் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
11ம் தேதி 'தட்கல்' முறை முன்பதிவு அறிவிப்பு
காலை 8 மணிக்கு துவங்கிய முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது
இதற்கான முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய பொதுமக்கள் பலர் ரயில் நிலையங்களில் வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே பயணச்சீட்டுகள் விற்று தீர்ந்தன. இதனால் வரிசையில் நின்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதனை தொடர்ந்து, இன்று முன்பதிவு செய்ய முடியாதவர்கள் வரும் 11ம் தேதி 'தட்கல்' முறையில் காலை 10 மணிக்கு பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.