பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆன்லைன் மூலம் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த இருக்கிறார். செப்டம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டெல்லி பிரகடனத்தை செயல்படுத்தல், அதன் பின்னர் உருவாகியுள்ள பல புதிய சவால்கள் குறித்து விவாதித்தல் ஆகியவை இன்றைய அமர்வில் நடைபெறும். கடந்த செப்டம்பர் 9-10ஆம் தேதிகளில் புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது கலந்து கொண்ட உலக தலைவர்கள் அனைவரும் இந்த ஆன்லைன் அமர்விலும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையால் இந்திய-கனடா உறவுகள் சிதைந்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த அமர்வில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய அமர்வில் சீன அதிபர் கலந்து கொள்ள போவதில்லை
அனைத்து G20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருக்கும், ஒன்பது விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும், 11 சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கும் இதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அமர்வில் கலந்து கொள்ள இருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் "தற்போதைய நிலையற்ற உலக நிலைமை" குறித்து பேசுவார் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று மாலை நடைபெற இருக்கும் ஆன்லைன் சந்திப்பில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளன. "நாட்டின் பிரீமியர் லீ கியாங் இன்று நடைபெறும் விர்ச்சுவல் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்." என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.