நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி இன்று விவாதம்
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இரண்டாம் நாளான நேற்று, மக்களவையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, மணிப்பூரில் இந்தியாவை பா.ஜ.க. கொன்றுவிட்டது என்றும், பிரதமர் மோடி, மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே கருதவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவரின் குற்றச்சாட்டிற்கு மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, அமித்ஷா ஆகியோர் பதிலளித்தனர். "மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது, அதை அரசியலாக்குவது அதைவிட வெட்கக்கேடானது" என அமித் ஷா மேலும் கூறினார்.
பிரதமர் மோடி இன்று விவாதம்
தொடர்ந்து, "முதல் நாளிலிருந்தே, மணிப்பூர் குறித்து விவாதிக்க நான் தயாராகதான் இருந்தேன். ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த விவாதத்தை விரும்பவில்லை. நான் பேசுவதை எதிர்க்கட்சிகள் கேட்க விரும்பவில்லை" எனவும் உள்துறை அமைச்சர் கூறினார். இந்நிலையில், நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 10 ) பதில் அளிப்பார் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்திருந்தார். மணிப்பூர் விவகாரம் குறித்து மக்களவையில் முதல்முறையாக பிரதமர் என்ன பேசவுள்ளார் என பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று காலை 11 மணி அளவில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.