'Act East' கொள்கையை வலுப்படுத்த இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 6) முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். தனது இந்த 6 நாள் பயணம் இந்தியாவின் 'Act East' கொள்கை, 'MAHASAGAR' தொலைநோக்கு பார்வை மற்றும் சுதந்திரமான, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தனது புறப்பாடு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் கூட்டு முயற்சியே 'மகாசாகர்' (Mutual and Holistic Advancement for Security Across the Regions) தொலைநோக்கு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Over the next few days, I will be attending various programmes in Indonesia, Australia and New Zealand. The aim of these meetings would be to boost economic and strategic cooperation with these valued developmental partners and ensure the youth of our nation get more…
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
பயணம்
முதல்கட்டமாக இந்தோனேசியா பயணம்
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல்கட்டமாக ஜூலை 6 முதல் 8 வரை அங்கு தங்கியிருப்பார். 2025 ஜனவரியில் இந்தியாவின் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினராக அதிபர் பிரபோவோ பங்கேற்றதைத் தொடர்ந்து, இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இப்பயணம் உதவும் என மோடி குறிப்பிட்டுள்ளார். இப்பயணத்தின் போது, யோக்யகர்த்தாவில் உள்ள புகழ்பெற்ற பிரம்பானன் கோவில் வளாகத்திற்கு இரு தலைவர்களும் செல்லவுள்ளனர். மேலும், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடனும் பிரதமர் கலந்துரையாடுகிறார்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு, வர்த்தக ஆலோசனைகள்
இந்தோனேசியாவை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் அழைப்பின் பேரில் மெல்போர்ன் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, இரு நாடுகளிடையேயான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடுகள், கல்வி, வளர்ந்து வரும் முக்கியத் தொழில்நுட்பங்கள் மற்றும் விளையாட்டு அறிவியல் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்துப் பேசப்படவுள்ளது.
நியூசிலாந்து
நியூசிலாந்துடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இலக்கு
பயணத்தின் இறுதிப் பகுதியாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனின் அழைப்பை ஏற்று ஆக்லாந்து நகருக்குப் பிரதமர் மோடி செல்கிறார். கடந்த 2025 மார்ச் மாதம் பிரதமர் லக்ஸன் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தும். குறிப்பாக, இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுக்குள் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கையெழுத்திடுவதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்த உறுதியளித்துள்ளன. இப்பயணங்களின் போது மூன்று நாடுகளிலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இந்திய வம்சாவளி மக்களின் பிரம்மாண்ட கூட்டங்களிலும் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.