LOADING...
தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு: பிரதமர் மோடி எடுக்கப்போகும் முடிவு என்ன? முழு விபரம்
தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு: பிரதமர் மோடி எடுக்கப்போகும் முடிவு என்ன? முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 15, 2026
08:14 am

செய்தி முன்னோட்டம்

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் 209 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ள பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான், பிப்ரவரி 17 (செவ்வாய்க்கிழமை) அன்று அந்நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 13 நாடுகளின் தலைவர்களுக்கு வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. சீனா, பாகிஸ்தான், இலங்கை, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி பங்கேற்பாரா?

வங்கதேசத்தின் அழைப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ள போதிலும், பிரதமர் மோடி இந்த விழாவில் நேரில் பங்கேற்பது கடினம் என்றே நிபுணர்கள் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணமாக இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன: பிப்ரவரி 17 ஆம் தேதி மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார். ஏஐ இம்பாக்ட் மாநாட்டிற்காக இந்தியா வரும் மேக்ரானுடனான இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அடுத்து, வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, இந்தியா தனது உறவை மிக நிதானமாகவே கையாள விரும்புகிறது. பாகிஸ்தான் பிரதமருடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும் இந்தியா திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா

இந்தியா சார்பில் யார் பங்கேற்பார்கள்?

பிரதமர் மோடி செல்லாத பட்சத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக ஒரு மூத்த அமைச்சரையோ அல்லது உயர் அதிகாரியையோ இந்தியா அனுப்ப வாய்ப்புள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அல்லது நாட்டின் துணைத் குடியரசுத் தலைவர் ஆகியோர் இந்தியா சார்பில் இந்த விழாவில் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வங்கதேசத்துடனான இந்தியாவின் தொடர் நட்புறவை உறுதிப்படுத்தும் ஒரு சமிக்ஞையாக அமையும்.

Advertisement

தேர்தல் முடிவு

தேர்தல் முடிவுகளும் தாரிக் ரஹ்மானின் வருகையும்

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி 297 இடங்களில் 209 இடங்களை வென்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பிறகு நடைபெறும் இந்த ஆட்சி மாற்றம், இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, தாரிக் ரஹ்மானுடன் தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement