செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமையன்று (அக்டோபர் 9) மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலர்களுடனான உரையாடலின் போது, பிரதமர் மோடி சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின் அடிப்படை விதி 56 (ஜே) ஐ மேற்கோள் காட்டி, இதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஒருவர் அரசு பணியில் இருக்க தகுதியற்றவராக இருந்தால், அவரை பணியிலிருந்து விடுவிக்க மேலதிகாரிகளால் முடியும். இவ்வாறு கட்டாயமாக ஓய்வு பெறும் சந்தர்ப்பங்களில், மூன்று மாத அறிவிப்பு அல்லது அந்த காலத்திற்கு சமமான ஊதியம் மற்றும் படிகள் போன்ற இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிக்கல்
55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அரசு ஊழியர்கள் இந்த விதியால் பாதிக்கப்படலாம் என்று என்று தெரிகிறது. விதி 48, ஒரு அரசு ஊழியர் 30 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை நிறைவு செய்திருந்தால், பொது நலன் கருதி அவரை ஓய்வு பெறச் சொல்ல நியமன அதிகாரியை அனுமதிக்கிறது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த முடிவுக்கு பதிலளிக்கலாம் மற்றும் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இந்த விதியின் கீழ் இதுவரை 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர். அரசாங்க ஊழியர்கள் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது தெளிவான செய்தியை வழங்கியதாக கூறப்படுகிறது.
பொதுமக்களின் குறைகளை களைவதில் முன்னுரிமை
பதவி உயர்வில் தற்போதுள்ள ஸ்கிரீனிங் செயல்முறையை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிடம் பிரதமர் மோடி, நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு வெகுமதி கிடைக்கும் என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பொதுமக்களின் குறைகளை வெறுமனே மேசைகளுக்கு இடையில் மாற்றாமல், விரிவாகவும் உடனடியாகவும் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறும் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பிரதமர் வலியுறுத்தினார். இந்த முறைகேடுகளைக் கையாள்வதற்கு ஒவ்வொரு வாரமும் ஒரு நாளை ஒதுக்குமாறு செயலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். செயல்முறையை மேற்பார்வையிடும் பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு உள்ளது என மேலும் கூறினார்.