பிரான்சில் உருவான இந்திய கோயில்! பாரிஸ் சுவாமிநாராயணன் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் சுவாமிநாராயணன் கோயிலின் திறப்பு விழாவில் காணொளி வாயிலாகப் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான மூலோபாய உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகாலப் பண்பாட்டு மற்றும் அரசியல் பிணைப்புகளே இந்த வலுவான நட்புறவுக்கு மிக முக்கியக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். இந்த பிரம்மாண்டக் கோயில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் சின்னமாக நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கூட்டாண்மை
தொழில்நுட்பம் முதல் கலாச்சாரம் வரையிலான கூட்டாண்மை
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து இரு நாடுகளும் சிறப்பு உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை உருவாக்கி வருவதாகப் பிரதமர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பாதுகாப்பு, விண்வெளித் துறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் புதிய வேகத்துடன் முன்னேறி வருகின்றன.
மேலும் 2026 ஆம் ஆண்டு இந்தியா-பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு ஆண்டாக கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், பிரான்சின் ரொமைன் ரோலண்ட், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் அன்னை மற்றும் பிரான்சில் யோகாவின் பிரபலம் ஆகிய வரலாற்று பண்பாட்டுத் தொடர்புகளையும் நினைவுகூர்ந்தார்.
இந்தியா
இந்தியாவில் செதுக்கப்பட்டுப் பிரான்சில் கட்டப்பட்ட கலைப்படைப்பு
பாரிஸில் திறக்கப்பட்டுள்ள இந்த சுவாமிநாராயணன் கோயில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, பிரான்சில் கட்டப்பட்ட ஒரு சிறப்புமிக்க அமைப்பாகும்.
இக்கோயிலின் பெரும்பாலான கற்கள் இந்தியாவில் பழங்காலக் கைவினைஞர்களால் செதுக்கப்பட்டு, பிரான்சின் நவீனப் பொறியியல் நுட்பத்துடன் இணைத்துக் கட்டப்பட்டுள்ளன.
இந்தியாவின் பண்டைய கைவினைத்திறனும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்த இந்த கலைப்படைப்பு, பிரான்ஸின் பன்முகத்தன்மையை வளப்படுத்துவதுடன் ஐரோப்பா முழுமைக்கும் இந்திய பண்பாட்டின் மனிதநேய மதிப்புகளைப் பரப்பும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஆன்மீக மையம்
பக்தியுடன் சேவையையும் வழங்கும் ஆன்மீக மையம்
சுவாமிநாராயணன் அமைப்பின் கோயில்கள் எப்போதும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி சமூக சேவை மையங்களாகவும் இயங்கி வருகின்றன.
அந்த வகையில் பாரிஸில் உள்ள இந்த புதிய கோயிலும் பலதரப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் திட்டங்களின் மையமாகத் திகழும் என்று அவர் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளில் பிஏபிஎஸ் அமைப்பு மூலம் கோயில்கள் கட்டப்படும் போதெல்லாம், இந்தியாவின் பண்டைய சிந்தனைகளும் பண்பாட்டு விழுமியங்களும் அங்கே பயணிக்கின்றன என்றும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் இந்த பாரிஸ் கோயிலுக்கு நேரடியாக சென்று தரிசனம் செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்.