மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள் - புத்தர் மற்றும் அணுசக்தி சாதனை குறித்து சில தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடியின் 133வது மன் கி பாத் வானொலி உரையில், வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) குறித்த முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இது வெறும் அரசின் பணி மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பு என்று குறிப்பிட்ட அவர், மக்கள் அனைவரும் துல்லியமான விவரங்களை வழங்கி, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தரவுகள் முற்றிலும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் பாதுகாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
கணக்கெடுப்பு
டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு
இம்முறை கணக்கெடுப்பு பணி மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் மொபைல் ஆப் மூலம் தரவுகளைச் சேகரிப்பார்கள். பொதுமக்கள் கணக்கெடுப்பாளர்கள் வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பே, தங்கள் விவரங்களை ஆன்லைனில் தாங்களே பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பதிவை முடித்தவுடன் மின்னஞ்சல் அல்லது அலைபேசிக்கு வரும் சிறப்பு அடையாள எண்ணை, கணக்கெடுப்பு அதிகாரியிடம் சரிபார்ப்பிற்காகக் காண்பிக்கலாம்.
புத்தரின் போதனை
புத்தரின் போதனைகளும் அமைதியின் அவசியமும்
எதிர்வரும் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இன்றைய உலகளாவிய பதற்றமான சூழலில் புத்தரின் போதனைகளின் அவசியத்தை வலியுறுத்தினார். "அமைதி நமக்குள் தொடங்குகிறது, நம்மை வெல்வதே ஆகச்சிறந்த வெற்றி" என்ற புத்தரின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டிய அவர், போர்ச் சூழல்கள் நிலவும் இந்த காலத்தில் புத்தரின் அமைதி வழி உலகிற்கு மிக அவசியம் என்றார். தென்னமெரிக்க நாடான சிலியில் உள்ள ஒரு அமைப்பு புத்தரின் போதனைகளைப் பரப்புவதையும் அவர் பாராட்டிப் பேசினார்.
கல்பாக்கம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் வரலாற்று சாதனை
தமிழகத்தின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக வளர்ப்பு உலை (Fast Breeder Reactor) அணுக்கரு நிலையை (Criticality) அடைந்துள்ளதை ஒரு வரலாற்று மைல்கல் என்று பிரதமர் மோடி பாராட்டினார். இந்தச் சாதனை இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பதாகவும், நாட்டின் சிவில் அணுசக்தித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காகப் பாடுபட்ட அணுசக்தி விஞ்ஞானிகள் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், குடியரசு தின விழாவின் ஒரு பகுதியான 'பீட்டிங் ரிட்ரீட்' (Beating Retreat) விழாவையும் அவர் சிறப்பித்துப் பேசினார்.