'வதந்திகளை நம்பாதீங்க, இது அரசியலுக்கான நேரமல்ல'; வளைகுடா போர் பதற்றத்திற்கு நடுவே பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் உரையின் 132வது பகுதியில் இன்று (மார்ச் 29) நாட்டு மக்களுடன் உரையாடினார். இதில் மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் கடுமையான போர் சூழல் குறித்து அவர் மிகுந்த கவலை வெளியிட்டார். உலகளாவிய ரீதியில் மார்ச் மாதம் மிகவும் கொந்தளிப்பான ஒன்றாக அமைந்துவிட்டது என்றும், இந்த இக்கட்டான நேரத்தில் 140 கோடி இந்தியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு
வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் இந்தப் போரினால் லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். குறிப்பாக வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வரும் அந்தந்த நாட்டு அரசுகளுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உலக நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
நெருக்கடி
எரிசக்தி நெருக்கடியும் இந்தியாவின் தயார் நிலையும்
இந்தப் போர் நடக்கும் பகுதி இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய மையமாக இருப்பதால், உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு உருவாகி வருவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா கட்டமைத்துள்ள உள்நாட்டுத் திறன்கள் மற்றும் பிற நாடுகளின் ஒத்துழைப்பு காரணமாக இந்தச் சவால்களை இந்தியா உறுதியுடன் எதிர்கொண்டு வருவதாக அவர் கூறினார். கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
எச்சரிக்கை
சுயநல அரசியலுக்கு இடமில்லை - மோடியின் எச்சரிக்கை
தேசிய நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். "இதில் சுயநல அரசியலுக்கு இடமில்லை, வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கிறார்கள்" என்று அவர் எச்சரித்தார். சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இக்கட்டான இந்தச் சூழலைப் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் கடக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய செய்தியாக இருந்தது.
மொபைல் ஆப்
ஞான பாரதம் ஆப் - கலாச்சாரப் பாதுகாப்பு
போர்ச் சூழலுக்கு நடுவே இந்தியாவின் பழமையான கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக ஞான பாரதம் ஆப் குறித்தும் பிரதமர் பேசினார். இந்தியாவில் சிதறிக் கிடக்கும் பழங்காலச் சுவடிகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் நோக்கில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருக்கும் அரிய கையெழுத்துப் பிரதிகளைப் புகைப்படம் எடுத்து இந்த ஆப்பில் பதிவேற்றுவதன் மூலம், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும் என்று அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஒற்றுமை
ஒற்றுமையே இந்தியாவின் பலம்
முடிவாக, இந்தியா சந்திக்கப் போகும் சவால்கள் எத்தகையதாக இருந்தாலும், மக்களின் ஒற்றுமையே அதனை முறியடிக்க உதவும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா காலத்தை இந்தியா எப்படி வெற்றிகரமாகக் கடந்ததோ, அதேபோல் தற்போதைய உலகளாவிய நெருக்கடியையும் இந்தியா கடக்கும் என்றார். வதந்திகளுக்குச் செவிசாய்க்காமல், நாட்டின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மக்கள் செயல்பட வேண்டும் என்பதே அவரது உரையின் சாரமாக அமைந்தது.