Loading...
விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு நாட்டிற்கு பெருமை; NVS-03 செயற்கைக்கோள் வெற்றியால் பிரதமர் மோடி உற்சாகம்
NVS-03 செயற்கைக்கோள் வெற்றியால் பிரதமர் மோடி உற்சாகம்

விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு நாட்டிற்கு பெருமை; NVS-03 செயற்கைக்கோள் வெற்றியால் பிரதமர் மோடி உற்சாகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 31, 2026
08:04 am

செய்தி முன்னோட்டம்

ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் NVS-03 வழிகாட்டுதல் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் கூடிய NVS-03 செயற்கைக்கோள், முக்கியமான தொழில்நுட்பங்களில் இந்தியா சுயசார்பு அடைவதற்கும் மக்களின் அன்றாட வழிசெலுத்தல் சேவைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார். விண்வெளி விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்ப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

நேவிக் அமைப்பு

நேவிக் அமைப்பின் குறைந்தபட்ச செயல்பாட்டுத் திறன் மீண்டும் மீட்பு

NVS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் சொந்த நேவிக் (NavIC) வழிகாட்டுதல் அமைப்பு தனது குறைந்தபட்ச செயல்பாட்டுத் திறனான 4 செயற்கைக்கோள்கள் கொண்ட அமைப்பை மீண்டும் எட்டியுள்ளது.

இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர், "நேவிக் அமைப்பு நாட்டின் மிக முக்கியமான உத்திசார் சொத்து என்றும், ரயில்கள், வாகனங்கள் மற்றும் கப்பல்களை நேரலையில் கண்காணிக்கும் பொதுப்பயன்பாடுகளுக்கு இது பெரிதும் உதவுகிறது." என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒரே நாடு ஒரே நேரம் திட்டத்திற்கு இந்த செயற்கைக்கோள் முக்கியப் பங்காற்றும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் சாதனை

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு மற்றும் இஸ்ரோவின் புதிய சாதனை

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த சாதனை இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளித் திறனையும் சுயசார்பு வழிகாட்டுதல் அமைப்பின் மீதான உறுதியையும் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்தடுத்த இரு ஜிஎஸ்எல்வி விண்வெளிப் பயணங்களுக்கு இடையே வெறும் 56 நாட்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டு, மிகக் குறைந்த காலத்தில் NVS-03 செயற்கைக்கோளை ஏவி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விக்ரம் சாராபாய் மற்றும் சதீஷ் தவான் ஆகியோரின் கனவை இந்திய விண்வெளித் துறை நனவாக்கி வருகிறது என்றும் அவர் கூறினார்.

ADVERTISEMENT

எதிர்காலப் பயன்கள்

நேவிக் சேவைகள் மற்றும் எதிர்காலப் பயன்கள்

தற்போது NVS-01 உட்பட மூன்று செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், NVS-03 இணைந்ததன் மூலம் இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேர சேவைகள் மீண்டும் முழுமையடைந்துள்ளன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துல்லியமான ருபீடியம் அணுக்கடிகாரத்துடன் பாய்ந்துள்ள இந்த செயற்கைக்கோள், இந்திய எல்லைப் பகுதிகளுக்குத் துல்லியமான இருப்பிடத் தரவுகளை வழங்கும்.

மேலும் வணிக ரீதியிலான ஸ்மார்ட்போன்கள், போக்குவரத்து சாதனங்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்குத் தேவையான வழிசெலுத்தல் சேவைகளைத் தடையின்றி வழங்க இந்த செயற்கைக்கோள் வழிவகுக்கும்.

ADVERTISEMENT