தேசிய உத்வேக தளம்: ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளம் என பிரதமர் பாராட்டு
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, லக்னோவில் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (தேசிய உத்வேக தளம்) என்ற பிரம்மாண்ட நினைவு வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார். சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகம், இந்தியாவின் ஒருமைப்பாடு, தற்சார்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழும் என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
சிறப்பம்சங்கள்
நினைவுச் சின்னத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் மியூசியம்
இந்த வளாகத்தில் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ஆகிய மூன்று தலைவர்களின் 65 அடி உயர வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தாமரை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள 98,000 சதுர அடி பரப்பளவிலான அதிநவீன மியூசியத்தில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் மற்றும் இந்தத் தலைவர்களின் பங்களிப்புகள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக் கிடங்காக இருந்த 30 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு, இன்று இந்த உன்னதமான நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளதாகப் பிரதமர் பாராட்டினார்.
நல்லாட்சி
நல்லாட்சி தினம் மற்றும் அரசியல் உரை
டிசம்பர் 25 ஆம் தேதியை 'நல்லாட்சி தினமாக' (Good Governance Day) கொண்டாடுவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா, தொலைத்தொடர்பு சீர்திருத்தங்கள் மற்றும் சாலை இணைப்பு ஆகியவற்றிற்கு வாஜ்பாய் இட்ட அடித்தளமே இன்றைய இந்தியாவின் வெற்றிக்குக் காரணம் என்றார். மேலும், வாரிசு அரசியலை சாடிய அவர், எதிர்க்கட்சிகள் பல தலைவர்களின் தியாகத்தை இருட்டடிப்பு செய்ததாகவும், ஆனால் பாஜக அரசு அம்பேத்கர் முதல் சர்தார் படேல் வரை அனைத்துத் தலைவர்களின் பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார். இவ்விழாவில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.