அசாம் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையினை துவக்கி வைத்தார் மோடி
செய்தி முன்னோட்டம்
அசாம் மாநிலத்தில் பல்வேறு நல திட்டங்களை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,14) காலை அங்கு சென்றார்.
இந்த பயணத்தின் பொழுது பிரதமர் மோடி கவுகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்(எய்ம்ஸ்) மருத்துவமனையினை திறந்துவைத்தார்.
கடந்த 2017ம் ஆண்டு மோடி இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் தற்போது இந்த மருத்துவனை ரூ.1,120 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை அசாம் மக்களுக்கு மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களுக்கும் மருத்துவ சேவையினை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நல்பாரி, கோக்ஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளையும் மோடி திறந்து வைத்துள்ளார்.
மோடி
அசாமின் சமூக உட்கட்டமைப்பு சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது-மோடி
பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த மூன்று கல்லூரிகளும் சுமார் ரூ.615 கோடி, ரூ.600 கோடி மற்றும் ரூ.535 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும் மோடி இன்று திறந்து வைத்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 ஆயுஷ் படுக்கைகள் உட்பட 750 படுக்கைகள் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து நலத்திட்டங்களையும் துவக்கி வைத்த மோடி மேடையில் பேசுகையில், கடந்த 9 ஆண்டு காலத்தில் அசாமின் சமூக உட்கட்டமைப்பு சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
எனது ஆட்சி நாட்டின் நலனிற்கு தான் முன்னுரிமை தரும், சுயநலத்திற்கு என்றும் முன்னுரிமை தராது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அசாம் மாநில மக்களுக்கு தனது பிஹு வருட வாழ்த்தினை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.