கேரளா வயநாடு நிலச்சரிவை நேரடியாக ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் வயநாடு மாவட்டத்திற்கு சென்றார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் பிரதமர் மோடி வான்வழி ஆய்வு நடத்தினார். அவருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர். வான்வழி ஆய்வில், இருவழிஞ்சி புழா நதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் தோற்றத்தை பிரதமர் பார்வையிட்டார். தற்போது 10,000க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ள நிவாரண முகாமை பிரதமர் மோடி பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல் காந்தி கோரிக்கை
வயநாடு சேதத்தை பார்வையிட்ட பிறகு, பிரதமர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். முன்னதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9), மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வயநாட்டைப் பார்வையிட முடிவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மோடி ஜி, பயங்கரமான சோகத்தை நேரில் ஆய்வு செய்ய வயநாட்டுக்குச் சென்றதற்கு நன்றி. இது ஒரு நல்ல முடிவு. பேரழிவின் அளவைப் பிரதமர் நேரில் பார்த்து அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று நம்புகிறேன்." என்றார்.