வெளிநாட்டுப் பயணங்களுக்குக் கூடுதல் வரி என பரவிய வதந்திக்கு பிரதமர் மோடியே நேரடியாக விளக்கம் கொடுத்தது ஏன்?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு வெளிநாட்டுப் பயணங்கள் மீது புதிய வரி அல்லது கூடுதல் கட்டணத்தை விதிக்க ஆலோசித்து வருவதாக வெளியானத் தகவல்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு மறுத்துள்ளார். இது குறித்து சிஎன்பிசி-டிவி18 ஊடகம் வெளியிட்ட செய்தியைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர், "இது முற்றிலும் பொய்யானது. இதில் ஒரு துளி கூட உண்மை இல்லை" என்று பதிவிட்டுள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நிதி அழுத்தத்தைச் சமாளிக்க இத்தகைய வரி விதிக்கப்பட உள்ளதாகத் தவறானத் தகவல்கள் பரவின. இத்தகைய ஊகங்கள் பொதுமக்களிடையே தேவையற்றப் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், பிரதமர் மோடியின் இந்த உடனடித் தலையீடு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
This is totally false.
— Narendra Modi (@narendramodi) May 15, 2026
Not an iota of truth in this.
There is no question of putting such restrictions on foreign travel.
We remain committed to improving ‘Ease of Doing Business’ and ‘Ease of Living’ for our people. https://t.co/9lxjbxz0nV
தவறான செய்தியைத் திரும்பப் பெற்ற செய்தி நிறுவனம்
பிரதமரின் விளக்கத்திற்குப் பிறகு சிஎன்பிசி-டிவி18 வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை
மத்திய அரசு வெளிநாட்டுப் பயணங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருவதாகச் செய்தி வெளியிட்ட சிஎன்பிசி-டிவி18 நிறுவனம், பிரதமர் மோடியின் விளக்கத்தைத் தொடர்ந்து தனது செய்தியைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. "மத்திய அரசு வெளிநாட்டுப் பயணங்கள் மீது வரி அல்லது கூடுதல் கட்டணம் விதிக்க ஆலோசித்து வருவதாக நாங்கள் வெளியிட்டச் செய்தி துல்லியமானது அல்ல. அந்தச் செய்தியை நாங்கள் திரும்பப் பெறுவதோடு, ஏற்பட்டத் தவறுக்காக வருந்துகிறோம்" என்று அந்த நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஐந்து நாடுகள் பயணத்தில் பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க எரிசக்தி ஒப்பந்தம்
தற்போது ஐந்து நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு குறுகியப் பயணத்தை மேற்கொண்டார். அபுதாபி அதிபருடன் நடத்தியப் பேச்சுவார்த்தையின் போது, மூலோபாய பெட்ரோலிய இருப்பு குறித்த ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஒப்பந்தம் உதவும். இந்தியாவில் உள்ள நிலத்தடி சேமிப்பு கிடங்குகளில் கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதில் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் இந்த ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தும்.