வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு மோடி போட்ட போன்; தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து மழையும், இந்தியா கொடுத்த வாக்குறுதியும்
செய்தி முன்னோட்டம்
வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் வங்கதேசத்தின் அடுத்த பிரதமருமான தாரிக் ரஹ்மானை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "வங்கதேச மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயக முறையிலான, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும், பொதுவான வளர்ச்சி இலக்குகளை அடையவும் தாரிக் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்." என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிவு
வங்கதேச தேர்தல் முடிவுகள் 2026
வங்கதேசத்தின் 13 வது நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி (BNP) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பிஎன்பி கூட்டணி 212 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணி 77 இடங்களைப் பெற்றுள்ளது. மற்ற சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் மீதமுள்ள இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக வங்கதேசத்தை ஆட்சி செய்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகம்
ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: முன்னாள் தூதர் வீணா சிக்ரி
இந்தத் தேர்தல் முடிவு குறித்து இந்தியாவின் வங்கதேசத்திற்கான முன்னாள் தூதர் வீணா சிக்ரி, "தாரிக் ரஹ்மானின் இந்த வெற்றி வங்கதேச மக்களின் வெற்றி மட்டுமல்ல, அது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மதவாத சக்திகளின் பிடியில் இருந்து நாடு காக்கப்பட்டுள்ளதை இந்தத் தீர்ப்பு காட்டுகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகள் ஆட்சியைப் பிடிக்க முயன்ற சூழலில், பிஎன்பியின் வெற்றி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மைக்குச் சாதகமான ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலக நாடுகள்
சர்வதேச நாடுகளின் எதிர்வினை
இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வரும் பிஎன்பி, இந்தியாவுடனான உறவை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லும் என்பது இப்போது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.