நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேவையான நடவடிக்கைகளை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருவதாகவும், சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். "நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. எனவே, சபாநாயகர் தேவையான நடவடிக்கைகளை மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருகிறார்" என்று பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி 'டைனிக் ஜாக்ரன்' ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. "புலனாய்வு அமைப்புகள் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன." என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் சம்பவம்
"அதன் பின்னணியில் உள்ள கூறுகள், திட்டங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதும், தீர்வு காண்பதும் மிக முக்கியமாகும். தீர்வுக்கான தேடலும் திறந்த மனதுடன் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் சர்ச்சை அல்லது எதிர்ப்பை அனைவரும் தவிர்க்க வேண்டும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், புகை குண்டுகளை வீசினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.