LOADING...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 18, 2026
03:54 pm

செய்தி முன்னோட்டம்

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில், மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா (131வது திருத்த மசோதா) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

விமர்சனம்

எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடியின் கடும் விமர்சனம்

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்திருப்பது, பெண்கள் உரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்று சாடினார். எதிர்க்கட்சிகளின் இந்த முடிவு, பெண்களின் வளர்ச்சியை விரும்பாத அவர்களின் எதிர்மறையான மனநிலையைக் காட்டுவதாகவும், இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தருணத்தை வீணாக்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மசோதாவை எதிர்த்ததன் மூலம், எதிர்க்கட்சிகள் நாட்டுப் பெண்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், இதற்கான அரசியல் விலையை அவர்கள் எதிர்காலத்தில் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். எதிர்க்கட்சிகளின் இந்தச் செயலை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.

மசோதாவின் பின்னணி

மசோதாவின் பின்னணி மற்றும் மக்களவை தோல்வி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவானது 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளின் மூலம் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில், இந்த மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு, அதாவது 352 வாக்குகள் தேவைப்பட்டிருந்தது. ஆனால், வாக்கெடுப்பில் 298 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவாக வாக்களித்தனர், 230 உறுப்பினர்கள் எதிர்த்தனர். மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவற்றைத் தாக்கல் செய்யாமல் அரசு தற்காலிகமாகத் தள்ளிவைத்தது.

Advertisement

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் விவாதங்கள்

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், மகளிர் இடஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் தொகுதி மறுவரையறையுடன் அதை இணைப்பதைத்தான் எதிர்க்கிறோம் என்று வாதிட்டனர். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தேர்தல் வரைபடத்தை மாற்றி, தென் மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தற்போதுள்ள மக்களவை இடங்களிலேயே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த ஆளும் தரப்பு, மசோதாவை ஒற்றுமையுடன் நிறைவேற்ற அழைப்பு விடுத்திருந்தது.

Advertisement

பிரதமர் உரை

பிரதமரின் இன்றைய உரையின் முக்கியத்துவம்

இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றவுள்ள உரை, நாட்டு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மசோதாவின் தோல்விக்கு எதிர்க்கட்சிகளின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்பதைத் தெளிவுபடுத்துவதோடு, பெண்களின் முன்னேற்றத்திற்குத் தான் கொண்டு வர நினைத்த திட்டங்கள் எப்படித் தடுக்கப்பட்டன என்பது குறித்தும் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும் அவர் விளக்கமளிக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடியின் இந்த உரை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பெண்களைத் திரட்டும் ஒரு முயற்சியாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.

Advertisement