பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் மாநாட்டினை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக அண்மையில் தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தெரிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு உள்ளிட்ட பல இன்னல்களுக்கு பின்னர் வரும் ஆகஸ்ட் 22ம்தேதி துவங்கி 24ம்தேதி வரை இந்த பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இதனிடையே நேற்று(ஆகஸ்ட்.,3)பிரதமர் மோடியை தென்-ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா தொலைபேசியில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். அப்போது இந்தாண்டில் இருதரப்பு ராஜதந்திர-தூதரக உறவுகள் துவங்கி 30ம்ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அத்துடன் நடக்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிற்கு மோடியை அழைத்த ராமசோபா, அதற்காக மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார்.
பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என தகவல்
இதனையடுத்து அவரின் அழைப்பினை ஏற்ற பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளாராம். அதனை தொடர்ந்து இந்தியாவில் நடக்கவுள்ள ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா எடுக்கும் முயற்சிகளை பாராட்டிய தென் ஆப்பிரிக்கா அதிபர், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருவதை எதிர்நோக்கி காத்திருப்பதாக மோடியிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த பிரிக்ஸ் மாநாடு நடப்பாண்டில் நேரடியாக நடைபெறவுள்ளது. இதில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படுவதோடு, பிரிக்ஸ் நாடுகளின் மத்தியிலுள்ள ஒத்துழைப்பு குறித்தும் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.