பழநி முருகன் கோயிலில் முடி காணிக்கை செய்தவர்களின் புகைப்படத்துடன் இலவச டிக்கெட்
பழனி முருகன் கோயிலில் திருவிழா நாட்களில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20,000க்கும் மேலான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதால்,பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் வளாகத்தில் 7 இடங்களில் மொட்டையடிக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் இங்கு கோயில் நிர்வாகம் சார்பில் முடிஇறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை,முடிக்காணிக்கை செலுத்தவரும் பக்தர்களுக்கு க்யூ-ஆர்.,கோடு கொண்ட இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது புதிய நடைமுறை ஒன்றினை கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பக்தர்கள் மொட்டையடிப்பதற்காக டிக்கெட் எடுக்கையில் அவரின் புகைப்படம், அவருக்கு முடிஇறக்கும் ஊழியரின் பெயர், பதிவுஎண், தேதி-நேரம், உள்ளிட்ட விவரங்கள் கொண்ட க்யூ-ஆர்.,கோடுடன் டிக்கெட் வழங்கப்படுகிறது. பின்னர்,மீண்டும் மொட்டையடித்த பின்னர் அந்த பக்தர் மற்றும் முடிஇறக்கம் செய்த ஊழியரின் புகைப்படங்கள் கொண்ட மற்றொரு டிக்கெட் கொடுக்கப்படுகிறது.
பணம் பெறுவது போன்ற பல்வேறு முறைகேடுகளை தவிர்க்கவே இந்த புதிய நடைமுறை
பூ முடி கொடுக்கும் பெண்களுக்கும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்களை ஸ்கேன் செய்து கோயில் பணியாளர்கள் பக்தர்களை வெளியே அனுப்புகிறார்கள். இதன்காரணமாக மக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர் ஒருவர்,"முறைகேடுகளை தவிர்க்க க்யூ-ஆர்.,கோடுடன் டிக்கெட் வழங்குவது அவசியம். ஆனால் இந்த 2முறை புகைப்படம் எடுக்கும் நடைமுறையால் திருவிழா காலங்களில் பக்தர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். எனவே பழைய முறையிலேயே டிக்கெட் வழங்கவேண்டும்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் கூறுகையில்,"மொட்டை அடிப்பதில் பணம் பெறுவது போன்ற பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அதற்காக தான் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கோயில்களிலும் இந்த நடைமுறை அமலிலுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.