கோவை பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் மெகா ஊழல் அம்பலம்: விசாரணைக்கு உத்தரவிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
செய்தி முன்னோட்டம்
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் வைப்பதற்காக புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, தற்போதைய தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் கடந்த அக்டோபர் 16 அன்று திறந்துவைக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்ட பிரபல எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், 'சிந்தை' இணையதளத்தில் எழுதிய கட்டுரையின் மூலம் இந்த மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஊழல் தகவல்கள்
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையில் சுட்டிக்காட்டிய அதிர்ச்சித் தகவல்கள்
பெரியார் அறிவுலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பெருமாள் முருகன், அங்கு வைக்கப்பட்டிருந்த நூல்களின் தரம் மற்றும் விலையை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
'அகல் விளக்கு' என்ற பெயரில் இதுவரை யாராலும் அறியப்படாத ஒரு பதிப்பகத்தில் இருந்து 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் சூர்யா பாலு என்பவர் எழுதிய 'நாலடியார் வாழ்வின் வழிகாட்டி' என்ற 300 பக்க நூலின் விலை ₹1,445 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது (பொதுவாக பிற பதிப்பகங்கள் ₹350-க்கே விற்கின்றன).
அந்நூலில், "நாலடியார் என்பவர் தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி" என்று எழுதப்பட்டுள்ளது.
சமண முனிவர்கள் எழுதிய 400 பாடல்களின் தொகுப்பான நாலடியாரை ஒரு தனி நபராகச் சித்தரித்து அபத்தமாக அச்சிட்டுள்ளனர்.
வரலாற்றுப் பிழைகள்
கீழடி படச்சுருள் & பீனிக்ஸ் பதிப்பகம்
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய 'தமிழ்நாடு ஒரு பார்வை' நூலில், "1947-ல் தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் இருந்தார்; 1952-ல் திராவிட கிழக்கின் அரசியல் வீரவாகிய மு.க. இராமசாமி முக்கியத் தலைவராக நின்றார்" என்பது போன்ற வரலாற்றுச் சுவடே இல்லாத தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பீனிக்ஸ் பதிப்பகம் மூலம் 100-க்கும் மேற்பட்ட தரமற்ற நூல்கள் வாங்கப்பட்டுள்ளதுடன், கீழடியில் இல்லாத ஒரு சிலையை கூகுளில் இருந்து படமெடுத்துப் போட்டு கீழடி நூல் என அச்சிட்டுள்ளனர்.
விசாரணை
"செவ்வாய் கிரகத்தில் கூட அப்படியொரு பதிப்பகம் இல்லை!": அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் இது குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,"பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையைப் படித்த போது வேதனையாகவும் சிரிப்பாகவும் இருந்தது. அங்குள்ள ஒரு பதிப்பகத்தில் 1,500 நூல்கள் வாங்கியுள்ளனர்".
"அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலேயே இல்லை. கடந்த பிப்ரவரியிலேயே (திமுக ஆட்சியில்) இந்தப் புத்தகங்களை வாங்கியுள்ளனர். பாரதியாரின் கதைகள் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளனர்; நல்லவேளை அந்த கதையையெல்லாம் படிக்காமல் பாரதியார் இறந்துவிட்டார்".
"பத்தாம் வகுப்பு மாணவர்கூட அதைவிட நன்றாக எழுதுவான். இந்த ஊழல் தொடர்பான விசாரணை உடனடியாகத் தொடங்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்றார்.
கண்டனம்
"ஊழலின் ஊற்றுக்கண் திமுக": முதல்வர் விஜய் கடும் கண்டனம்
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் குறித்துத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் திமுகதான்".
"பெரியார் பெயரிலேயே ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறார்கள். நம் வீட்டுப் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகத்திலும் ஊழலா? பெரியார் பெயரையும் தமிழ் மொழியையும் வைத்து கொள்ளையடிப்பதை வரலாறாகவே நிகழ்த்தி வரும் திமுக, மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்பது உறுதி" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும்…
— TVK Vijay (@TVKVijayHQ) November 6, 2026