
ஆண்டிற்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் - கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
கர்நாடகா மாநிலத்தில் வரும் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஆளுங்கட்சியான பாஜக தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் பல இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.
அதன்படி அந்த அறிக்கையில், மாதந்தோறும் ஏழைகளுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படும்.
நாள்தோறும் ஏழைகளுக்கு அரை லிட்டர் நந்தினி பால் இலவசமாக அளிக்கப்படும்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவியருக்கு 30 லட்சம் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் போன்ற அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில் இவை முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையாக பார்க்கப்படுகிறது.
தேர்தல்
வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல் பரிசோதனை
மேலும் அந்த தேர்தல் அறிக்கையில், வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் இலவச வீடுகள், பட்டியல் இனத்தவருக்கு ரூ.10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகையாக 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
தொடர்ந்து பழமை வாய்ந்த கோயில்களை புனரமைக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
குறைந்த விலையில் உணவு அளிக்கும் உணவகங்கள் அமைக்கப்படும்.
மத அடிப்படைவாத மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை தடுக்க காவல்துறையில் புதிய பிரிவு உருவாக்கப்படும்.
சட்டவிரோத குடியிருப்புகளை களைய கர்நாடக குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் போன்ற அறிவிப்புகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இதனைதொடர்ந்து, வயதானவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச உடல் பரிசோதனை செய்ய அனுமதி உண்டு.
சூரிய ஒளி கொண்ட பம்பு செட் அமைப்பவர்களுக்கு 80% மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.