பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள்
உலகில் உள்ள பல இடங்களுக்கு ஒவ்வொரு தனித்துவம் உள்ளது, அதே போல் தனித்தன்மையான நாட்டுப்புற கதைகளும் சொல்லப்பட்டு வருவது இயல்பு. பெரும் வளம் மற்றும் சிறந்த வரலாற்றை கொண்ட கிராமங்களுக்கு இது பொருந்தும். இந்நிலையில் சில கிராமங்களில் கடைப்பிடித்து வரும் வித்யாசமான பாரம்பரிய, கலாச்சார நடைமுறைகள் நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். அதனடிப்படையில் எல்லா மூடநம்பிக்கைகளையும் உடைத்து மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக ராஜஸ்தானில் உள்ள நாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இனானா கிராமம் விளங்கி வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வகுப்புவாத பிரிவினைகளை மீறி, பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயர்களை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இனானியர்கள் என்ற ஒரே குடும்ப பெயரை கொண்ட கிராம மக்கள்
பல அறிக்கைகளின் படி, இனானா கிராமத்தில் வசித்து வரும் மக்கள், அவர்கள் கும்ஹர், மேக்வால், சென், ஜாட் அல்லது ராஜ்புத் போன்ற எந்த சமூகத்தை சார்ந்தவர்களாக இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் இனானியர்கள் என்ற பெயரை தங்களது குடும்ப பெயராக கொண்டுள்ளனர். இந்த கிராமத்தின் புராணக்கதை நம்மை 1358ம் ஆண்டு அழைத்து செல்கிறது. சோப்ராஜின் மகனான இந்தர் சிங்கின் ஆட்சியின் போது தான் இந்த கிராமம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வரலாறு உண்மை என்று நம்பும் பட்சத்தில் இந்த கிராமத்தில் 12 சாதிகள் மற்றும் 12 பண்ணைகளை சேர்ந்த மக்கள் ஒன்றாக இருந்து வந்துள்ள நிலையில், அனைவரும் கூட்டாக இனானியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இந்தர் சிங் பெயரின் பின்னாலும் இனானியர் என்று சேர்க்கப்பட்டு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.