
புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரியில் இ-சலான் கருவி மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையை அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
அதோடு விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் அந்த மாநிலத்தில் விபத்தினை குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது விதிகளை மீறுபவர்களுக்கு கையால் எழுதி தந்தோ, கையடக்க கருவி மூலமாகவோ சலான் வழங்கப்படுவதும், ஸ்பாட் பைன் வசூலிப்பதும் நடைமுறையில் உள்ளது.
இதில் காலதாமதம், கையில் பணம் இல்லாதது போன்ற காரணங்களால் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
விதிமீறுபவர்களின் முழுவிவரங்களை சேகரிக்க முடியாத நிலையும் உள்ளது.
இதற்கான தீர்வாகதான் புதுச்சேரியில் 'இ-சலான்' கருவி மூலம் 'ஸ்பாட்பைன்' வசூலிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
போக்குவரத்து துறை
35 கருவிகள் போக்குவரத்து போலீசாரிடமும், 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
இந்த முறையில் அபராதம் வசூலிக்க புதுச்சேரி போக்குவரத்து துறை 50 'இ-சலான்' அதிநவீன கருவிகளை வாங்கியுள்ளது.
இதில் 35 கருவிகள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மீதமுள்ள 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இ-சலான் கருவியானது அனைத்து வாகன உரிமங்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய சாரதி ஆப் மற்றும் அனைத்து வாகனங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய 'வாஹன் ஆப்' ஆகியவற்றோடு இணைக்கப்பட்டிருக்கும்.
இதில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண் அல்லது ஓட்டுநர் உரிம எண் பதிவு செய்தால் அவருடைய அனைத்து விவரங்களும் இதில் பதிவாகிவிடும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் முன்னராக விதி மீறலில் ஈடுபட்டுள்ளாரா உள்ளிட்ட விவரங்களை காணலாம் என்று கூறியுள்ளார்.