ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்!
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் 288 பேர் உயிரிழந்து, 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவின் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் கௌதம் அதானி, ரிலையன்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான நீதா அம்பானி ஆகியோர் உதவிக்கரம் நீட்டியிருக்கும் நிலையில், தற்போது பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான விஜய் சேகர் ஷர்மாவும் உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பண உதவி செய்ய விரும்புபவர்களிடமிருந்து நிதி திரட்டும் பிரச்சாரம் ஒன்றையும் அறிவித்திருக்கிறார் விஜய் சேகர் ஷர்மா. பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்திய மக்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தானும் ஒரு ரூபாய் அளிக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.
பேடிஎம்மின் நிதி திரட்டும் பிரச்சாரம்:
இது குறித்த அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார் அவர். அதில் பொதுமக்கள் பேடிஎம் சேவையின் மூலம் நன்கொடை அளிப்பதற்கான லிங்க் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார் அவர். இந்த நிதி திரட்டும் பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்படும் நிதியானது ஒடிசா முதலமைச்சர் நிவாரண நிதியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்சாரத்தின் கீழ் அளிக்கப்படும் நன்கொடைக்கு 80G-யின் கீழ் வரிவிலக்கும் பெற்றுக் கொள்ள முடியும் என இதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரச்சாரத்தின் மூலம் நன்கொடை அளித்தவர்கள், அதற்கான ஆவணத்தை பேடிஎம் செயலியின் ஆர்டர்ஸ் & புக்கிங்ஸ் பகுதியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அந்த வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.