ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை
இந்தியா முழுவதும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் ரூ.2,000 நோட்டுகளை வைத்துள்ளவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் அந்த நோட்டுகளை கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவியது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து பொதுமேலாளர் இயக்குனர் அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றினையும் வெளியிட்டதாக தகவல்கள் வெளியானது. அதில், நாளை(மே.,22) முதல் நடத்துனர்கள் அனைவரும் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தது.
பயணிகள் கொடுக்கும் நோட்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
மேலும் அதில், பேருந்தில் வரும் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் அளிக்காமல் பக்குவமான முறையில் இது குறித்து எடுத்துக்கூறி பயணிகளிடமிருந்து ரூ.2,000 நோட்டுகளை வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். அதே போல் வசூலான பணத்தினை மற்றவர்களிடம் மாற்றம் செய்து கொள்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதற்கு மாறாக தமிழக போக்குவரத்துத்துறை ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அரசு பேருந்துகளில் பயணிகள் கொடுக்கும் ரூ.2,000 நோட்டுக்கள் வாங்கிக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பயணிகள் தவிர வெளி நபர்களுக்கோ, தனியார் நிறுவனங்களுக்கோ ரூ.2,000 நோட்டுகளை மாற்ற அனுமதி கிடையாது என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.