
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை - பிரதமர் மோடி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வைத்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மோடியினை சந்தித்து பேசியுள்ளார்.
இலங்கை நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நேர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அப்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாட்டின் அதிபராக பதவியேற்றார்.
அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் முடிந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து ரணில் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
பின்னர் பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மோடி
கப்பல் மற்றும் படகு போக்குவரத்து சேவைகளில் கவனம் செலுத்திவரும் இலங்கை
அப்போது அவர், இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்போவதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதன்படி கப்பல் சேவையானது தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனைத்தொடர்ந்து, இந்தியா-இலங்கை இடையேயான இந்த கப்பல் சேவை துவங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னையிலிருந்து இலங்கைக்கு எம்எஸ்.எம்பரெஸ் என்னும் சொகுசுக்கப்பல் 3 துறைமுகங்கள் இடையே இயங்கிவருகிறது என்பதனையும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த சொகுசுக்கப்பலால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையினை அதிகரித்துள்ளது.
சுற்றுலா மற்றும் வருவாயினை மனதில்கொண்டு இலங்கை அரசு தற்போது கப்பல் மற்றும் படகு போக்குவரத்து சேவைகளில் கவனம் செலுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.