LOADING...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்: கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்: கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 04, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து இரு அவைகளிலும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் முடிவுகள் எடுப்பதற்காக இந்தக் கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்டிஏ கூட்டணி

எதிர்க்கட்சிகளின் உடைப்புக்குப் பிறகு பலமடையும் என்டிஏ கூட்டணி

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகளில் ஏற்பட்ட சமீபத்திய பிளவுகளுக்குப் பிறகு கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இது என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸின் 28 மக்களவை உறுப்பினர்களில் 20 பேரும், உத்தவ் தாக்கரேவின் 9 எம்பிக்களில் 6 பேரும் அதிருப்தியாளர்களாக மாறி ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவளித்துள்ளதால், மக்களவையில் ஆளுங்கட்சியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

பலப்பரீட்சை

இரு அவைகளிலும் நீடிக்கும் புதிய அரசியல் பலப்பரீட்சை

அதே நேரத்தில், அதிருப்தி எம்பிக்களைத் தனித்தனி குழுக்களாக அங்கீகரிக்கக் கோரும் கோரிக்கையின் மீது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிலும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஆதரவு எண்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேறாமல் போன அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை அரசு இந்தத் தொடரில் மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

எதிர்க்கட்சிகள்

அரசை முடக்க எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் முக்கிய ஆயுதங்கள்

மறுபுறம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அரசை முடக்கத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் நுழைவுத்தேர்வு மறுதேர்வு முறைகேடுகள் மற்றும் திரிணாமுல், சிவசேனா கட்சிகளின் பிளவுகளுக்குப் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவுள்ளன. அத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தால் மத்திய கிழக்கில் நிலவிய விநியோகச் சங்கிலித் தடை நீங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, உள்நாட்டில் எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்க்கட்சிகள் வலுவாக முன்வைக்கவுள்ளன.

Advertisement