Loading...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: 7 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: 7 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2026
07:42 am

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று பலத்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் நாளான இன்றே பல்வேறு முக்கிய விவகாரங்களில் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நேரடி மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 அதிருப்தி எம்பிக்கள் இணைந்துள்ள தேசிய குடிமக்கள் கட்சி(NCPI) அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி கட்சிகள் கூட்டாக வெளிநடப்பு செய்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

எதிர்ப்பு

எதிர்க்கட்சிகளின் பிரதான ஆயுதங்கள்

அரசை பல்வேறு முக்கிய விவகாரங்களில் முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அவற்றுள் முக்கியமாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட்-யுஜி வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

ராமர் கோவில் நன்கொடைகளில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகளை முன்வைத்து அரசைத் தாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

சிவசேனா (யுபிடி) கட்சியின் 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைவதற்கும், திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்களுக்குத் தனி இருக்கை ஒதுக்கிய சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவிற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மசோதா

அரசின் புதிய சட்ட மசோதாக்கள்

இந்த கூட்டத்தொடரில் 5 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

1. வருமான வரி (திருத்த) மசோதா, 2026

2. உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026

3. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026

4. தேசிய அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026: மாநிலங்களவையில் இன்று அறிமுகமாகும் இந்த மசோதா, 'வந்தே மாதரம்' தேசிய பாடலுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கவும், அதை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வழிசெய்கிறது.

5. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026

FCRA திருத்த மசோதா, விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதா ஆகியவையும் விவாதத்திற்கு வரவுள்ளன.

ADVERTISEMENT

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை மசோதா வருமா?

கடந்த கூட்டத்தொடரில் தோல்வியடைந்த, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மற்றும் புதிய தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவை அரசு மீண்டும் கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2029 பொதுத்தேர்தலுக்குள் லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்க இந்த மசோதா முயல்கிறது.

ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பு திருத்தத்திற்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை தேவை என்பதால், நாடாளுமன்றத்தில் இதற்கான பலப்பரீட்சை மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.

ADVERTISEMENT