Loading...
வீடு இடிந்து தரைமட்டம்! பரமத்தி வேலூர் அருகே நாட்டு வெடி வெடித்து பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி
பரமத்தி வேலூர் அருகே நாட்டு வெடி வெடித்து பயங்கர விபத்து

வீடு இடிந்து தரைமட்டம்! பரமத்தி வேலூர் அருகே நாட்டு வெடி வெடித்து பயங்கர விபத்து; 3 பேர் பரிதாப பலி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 01, 2026
07:01 am

செய்தி முன்னோட்டம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (53). கோவில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளைத் தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள இவர், தனது வீட்டின் மாடியிலேயே நாட்டு வெடிகளைத் தயாரித்து வந்துள்ளார். வழக்கமாகத் தயாரிக்கப்படும் வெடிகள் கபிலர்மலையில் உள்ள குடோனில் வைக்கப்படும் நிலையில், நேற்று (செப்டம்பர் 30) மாலை மாடியில் வெடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி

கணவன், மனைவி உட்பட 3 பேர் உடல் சிதறி பலி

திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்துச் சிதறியதில், மாடியில் பணியில் இருந்த ராஜசேகரனின் மனைவி சத்தியா (45) தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

மேலும், வெடிவிபத்தின் தீவிரத்தால் வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானதில், இடிபாடுகளுக்குள் சிக்கி ராஜசேகரன் மற்றும் பாண்டமங்கலத்தை சேர்ந்த பெண் தொழிலாளியான மலர் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீட்டின் கீழ் தளத்தில் இருந்த ராஜசேகரனின் இரண்டாவது மகன் சஞ்சய் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

மீட்புப் பணி

அருகில் இருந்த வீடுகள் சேதம் மற்றும் தீவிர மீட்புப் பணி

நாட்டு வெடி வெடித்த அதிர்வில் அருகில் இருந்த 4 வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுக் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி ஆட்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT