ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 21) தனது மறைந்த தந்தைக்கு உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.
ட்விட்டரில் ராஜீவ் காந்தியின் பல்வேறு நினைவுகளை ஒரு வீடியோவாக பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி இந்தியில், "அப்பா! ஒரு உத்வேகமாக, என் நினைவுகளில், எப்போதும் என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள்!" என்று கூறி உள்ளார்.
இன்று காலை, தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள வீர் பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
DETAILS
ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடியும் ட்விட்டரில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
1984ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார்.
அக்டோபர் 1984இல் அவர் பதவியேற்றபோது அவருக்கு 40 வயதாகி இருந்தது. எனவே, அவர் இந்தியாவின் இளைய பிரதமராக கருதப்பட்டார்.
அவர் டிசம்பர்-2, 1989 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார்.
1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.