Loading...
வங்கக் கடலில் நடுவழியில் மூழ்கிய சரக்குக் கப்பல்! 24 மாலுமிகளைக் காப்பாற்ற இந்தியக் கடலோரக் காவல் படை நடவடிக்கை
வங்கக் கடலில் பாராதீப் அருகே பனாமா சரக்குக் கப்பல் மூழ்கியது

வங்கக் கடலில் நடுவழியில் மூழ்கிய சரக்குக் கப்பல்! 24 மாலுமிகளைக் காப்பாற்ற இந்தியக் கடலோரக் காவல் படை நடவடிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2026
06:34 am

செய்தி முன்னோட்டம்

ஒடிசா மாநிலத்தின் பாராதீப் கடற்கரையில் இருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில், 24 மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி பொருத்தப்பட்ட எம்.வி ஓஷன் வின்னர் என்ற சரக்குக் கப்பல் வங்கக் கடலில் எதிர்பாராதவிதமாக மூழ்கியது. ஒடிசாவில் இருந்து இரும்புத் தாதுக்களைக் ஏற்றிக் கொண்டு சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆபத்தில் சிக்கியுள்ள மாலுமிகளை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து தீவிர மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளன.

மீட்பு நடவடிக்கை

கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் உடனடி மீட்பு நடவடிக்கை

கப்பலில் பயணித்த 24 மாலுமிகளில் 20 பேர் சீனா, 3 பேர் மியான்மர் மற்றும் ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் ஆவர்.

கப்பல் மூழ்கத் தொடங்கியதும் தகவல் அறிந்து விரைந்த இந்தியக் கடலோரக் காவல் படை, அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பிற வணிகக் கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுத்து மீட்புப் பணியில் ஈடுபட செய்தது.

இதுவரை இரு மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 22 மாலுமிகளைத் தேடும் பணி ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சோமாலியா

சோமாலியக் கடற்பகுதியில் கேமரூன் கப்பல் கடத்தல் சம்பவம்

இதேவேளையில், சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடலோரப் பகுதியில் 6 இந்தியர்கள் உட்பட 10 மாலுமிகளுடன் சென்ற கேமரூன் நாட்டின் எம்/வி லூதுஃப் என்ற சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர்.

துருக்கியில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்கள், தகவல் தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் உபகரணங்களை சுமந்து கொண்டு மொகடிஷுவில் உள்ள துருக்கி பயிற்சி முகாமிற்கு சென்ற போது இக்கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.

இதில் பயணித்த 6 இந்தியர்களின் நிலை குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகாததால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.

ADVERTISEMENT