
ஐந்து ஆண்டுகளில் 36,800 URLகளை முடக்கிய மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 36,838 இணைப்புகளை (URLs) இந்திய அரசு முடக்கியுள்ளதாகத் தகவல் தெரிவித்திருக்கிறார் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.
மாநிலங்களவையில் CPI(M) கட்சியைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர்.
மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 69A-வின் கீழேயே இந்த இணைப்பு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் ஆகிய காரணங்களுக்காகவும் இந்த இணைப்பு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
இந்தியா
எக்ஸ் தளத்தில் அதிகபட்ச முடக்கங்கள்:
2018ம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் 2023 வரை எக்ஸ் தளத்தில் மட்டும் 13,660 இணைப்புகள் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸூக்கு அடுத்தபடியாக, ஃபேஸ்புக்கில் 10,197 இணைப்புகளும், இன்ஸடாகிராமில் 3,023 இணைப்புகளும், யூடியூபில் 5,759 இணைப்புகளும் முடக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து ஆண்டுகளில், 2020ம் ஆண்டே அதிகபட்மாக 9,849 இணைப்புகள் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு 6,118 முடக்கங்களும், 2022ம் ஆண்டு 6,775 முடக்கங்களும், 2023ம் ஆண்டு அக்டோபர் வரை 3,470 இணைப்பு முடக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.