
தொடர் நாடாளுமன்ற அமளி காரணமாக எம்.பி.க்களின் கேள்வி நேரமும் பூஜ்ய நேரமும் குறைகிறது
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து ஏற்பட்ட இடையூறுகள், அவையின் முக்கியமான வேளைகளான கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் ஆகியவற்றை கடுமையாக பாதித்துள்ளன. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) தங்களது மக்களுக்காக கேள்விகள் எழுப்பும் முக்கிய வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள். கேள்வி நேரம் (முற்பகல் 11 முதல் 12 மணி வரை) அமைச்சர்களிடம் நேரடி பதில்கள் பெறும் ஒரு முக்கிய கட்டமாகவும், பூஜ்ய நேரம் (Zero Hour) அவசர பொது பிரச்சினைகளை எழுப்பும் வாய்ப்பாகவும் உள்ளது. இந்த நேரங்களை சரிவர பயன்படுத்த, ஒரு சில எம்.பி.க்கள் மாதங்கள் முதல் ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பாதிப்பு
பொதுமக்களின் பிரச்சனையை அவையில் கேள்வி எழுப்ப முடியாத சூழல்
ஆனால், தற்போது அவை சீராக நடக்காத சூழ்நிலையில், இந்த நேரங்கள் தொடக்கம் முதலே இடையூறுகளுக்கு உள்ளாகின்றன. உதாரணமாக, இம்முறை மாநிலங்களவையில் 210 பூஜ்ய நேர சமர்ப்பிப்புகளில் வெறும் 5 மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன; அதேபோல், 210 நட்சத்திரக் கேள்விகளில் 14 மட்டுமே விவாதிக்கப்பட்டன. CNN-News18 சேனலுடன் பேசிய ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர், 32 மணி நேர ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தினைத் தவிர, பொதுமக்கள் நலனுக்கான கேள்விகளை முன்வைக்க முடியாதது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கேள்வி நேரம்
முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கேள்வி நேரம் மற்றும் விவாத நேரங்கள்
திங்களன்று வெளியிட்ட தகவலின்படி, மழைக்காலக் கூட்டத் தொடக்கத்தில் மாநிலங்களவை 210 நட்சத்திரக் கேள்விகள், 210 பூஜ்ய நேர கோரிக்கைகள், 210 சிறப்புக் குறிப்புகளுக்கு இடம் அளிக்க வேண்டும். ஆனால், இடையூறுகளால் வெறும் 14 கேள்விகள், 5 பூஜ்ய நேர உரைகள், 17 சிறப்புக் குறிப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனால், "62 மணி நேரம் 25 நிமிடங்கள் வீணானது" எனத் தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8 அன்று மக்களவையில் ஏற்பட்ட குழப்பத்தின் போது, சபாநாயகர் ஓம் பிர்லா, "கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது. மக்களின் கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டும். தயவுசெய்து அவையை அமரச் செய்யுங்கள்," என கேட்டுக்கொண்டார்.