கடலில் கலந்த கச்சா எண்ணெய் - அகற்றும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவு
சென்னை மாநகரை அண்மையில் மிக்ஜாம் புயல் பெருமளவில் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த புயலின் பொழுது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியுள்ளது. இந்த எண்ணெய் பரவல் சுற்றுச்சூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. அதனால் இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தது. அதில் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், கடல்நீரில் படர்ந்திருக்கும் எண்ணெய்யை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
வழக்கின் விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று(டிச.,12) வந்த நிலையில், சென்னை துறைமுகத்திலிருந்து 380.,மீ தடுப்புகளும், காரைக்கால் துறைமுகத்திலிருந்து 350.,மீ தடுப்புகளும் கொண்டுவரப்பட்டு கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75.,மீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'எண்ணூர் கடல்பகுதியில் கச்சா எண்ணெய் அகற்றும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். எண்ணெய்யை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த கச்சா எண்ணெய் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, இந்த வழக்கின் அடுத்த விசாரணையினை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.