ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, நேற்று(ஜன.,31) இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக கட்சி சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து இரு அணிகளாக பிரிந்து இருக்கும் அதிமுகவில், ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிடப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்தார். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் வெளியாகும் அறிவிப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பாஜக தரப்பில் நீடிக்கும் குழப்பமான சூழல்
இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இத்தேர்தலில் பாஜக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் தங்கள் வேட்பாளர் வாபஸ் பெற்றுக்கொள்வார் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். முன்னதாக, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தாங்கள் போட்டியிடாமல் விட்டு தருவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். எனினும், இதில் பாஜக போட்டியிடுமா அல்லது விலகுமா என்றும், அதிமுகவின் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்குமா இல்லையேல் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்குமா என்பது தொடர்ந்து குழப்பமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.