புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளின் திறப்பு கோடை வெயிலால் ஒத்திவைப்பு
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, ஜூன் 1ம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும். இந்த அறிவிப்பானது அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவிற்கு சுட்டெரிக்கும் வெயில்
மேலும் அந்த அறிக்கையில், இந்த அறிவிப்பானது புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார். வகுப்பு வாரியாக பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலானது அதிகரித்து காணப்படும். ஆனால் இந்தாண்டு வரலாறு காணாத அளவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வெப்பம் தணியும் வரையில் கர்ப்பிணி பெண்கள், முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோர் மதிய வேளையில் வெளியே வர வேண்டாம் என்று ஏற்கனவே வானிலை அறிக்கை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாகவே, புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.