Loading...
உதகை - மேட்டுப்பாளையம் மலைப்பாதை மண்சரிவில் சோகம்: அரசுப் பேருந்து மீது மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு
அரசுப் பேருந்து மீது மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு

உதகை - மேட்டுப்பாளையம் மலைப்பாதை மண்சரிவில் சோகம்: அரசுப் பேருந்து மீது மண் சரிந்து ஒருவர் உயிரிழப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
01:52 pm

செய்தி முன்னோட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகக் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நந்தகோபால் பாலம் முதல் பர்லியார் வரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்துப் பேரழிவு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த மண்சரிவின் போது அரசுப் பேருந்து மீது மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்து நடத்துநர் உட்பட 8 பேர் காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மீட்பு

150 மாணவர்கள் மற்றும் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு

பர்லியாறு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் அரசுப் பேருந்து ஒன்று சிக்கிய நிலையில், விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட டயர் பஞ்சர் காரணமாக பேருந்தில் இருந்த 50 பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும், அதே மலைப்பாதையில் மண்சரிவில் சிக்கித் தவித்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தீயணைப்பு வீரர்கள் கயிறுகளைக் கட்டி பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநர்

லாரி ஓட்டுநரை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

குன்னூர் மலைப்பாதையில் நள்ளிரவு பயணித்த லாரி ஒன்று கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக மண்சரிவில் சிக்கி புதைந்துள்ளது.

லாரியின் ஓட்டுநர் உள்ளே சிக்கியுள்ள நிலையில், ஜேசிபி எந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றி அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரிந்தா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

போக்குவரத்து முடக்கம்

தொடரும் கனமழையால் முடங்கிய போக்குவரத்து

தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், பாறைகள் சரிந்தும் உள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் இணைந்து ஆபத்தான சூழலிலும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மலைப்பாதை பயணங்களைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அவசர அறிவுறுத்தல் வழங்கி வருகிறது.

ADVERTISEMENT