
ஊட்டியில் அடுத்த 3 மாதங்களுக்கு பட ஷூட்டிங்களுக்கு தடை; ஏன்?
செய்தி முன்னோட்டம்
ஊட்டியில் நாளை முதல் ஜூன் 5 வரை திரைப்பட படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
இந்த தடை, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலை துறையின் 7 இடங்களில் நடைமுறைக்கு வரும்.
கோடை விடுமுறையிலேயே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதற்காக, சுற்றுலா இடங்களில் அமைதியும், பாதுகாப்பும் காக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா
கோடை துவங்கியாச்சு, சுற்றுலா பயணிகளிலும் வந்தாச்சு!
வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டினரின் பிரியமான சுற்றுலாத்தலமான ஊட்டியில் சுற்றுலா சீசன் ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் பெறும்.
இதனை கருத்தில் கொண்டு, உதகை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும்.
இந்த சூழலில் அங்கே படப்பிடிப்பு நடத்தப்பட்டால், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருக்கும், அதே நேரத்தில், நடைபாதைகள், மலர் பாத்திகள் உள்ளிட்ட பகுதிகள் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.