27% பெண்கள் மட்டுமே சொந்தமாக நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள்
27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்றும் மீதமுள்ள பெண்களின் நிதி சார்ந்த முடிவுகள் ஆண்களை சார்ந்தே இருக்கிறது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. பெரும் நகரங்களில் உள்ள 5,200க்கும் மேற்பட்ட பெண்களிடம் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பை நியோ-ரியால்டி முதலீட்டு தளமான MYRE கேபிட்டல் நடத்தியுள்ளது. பெண்கள் எப்படி முதலீடு செய்கிறார்கள், அவர்கள் எப்படி நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்று ஆராயும் இந்த ஆய்வு, 27% பெண்கள் மட்டுமே நிதி சார்ந்த முடிவுகளை சொந்தமாக எடுக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
இந்த ஆய்வில் வெளிவந்த தகவல்கள்
ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் 64% மட்டுமே தற்போது முதலீடு செய்கிறார்கள். நிலையான வைப்புத்தொகை(FD), PPF, NPS மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் தான் அவர்களது முக்கிய முதலீட்டு முறையாக இருக்கிறது. சுமார் 36% பெண்கள் நிதி பற்றாக்குறை அல்லது முதலீடு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளாத காரணத்தால் முதலீடு செய்வதில்லை. 12 லட்சத்துக்கும் குறைவான வருமானம் வாங்கும் பெண்கள் அதிகமானோர் இந்த 36 சதவீதத்தில் இருக்கின்றனர். முதலீடு செய்யும் பெண்களில் 79% பேர் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால், முதலீடு செய்யும் பெண்களில், 54% பேர் கணவர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை நம்பியுள்ளனர் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.