சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று(மார்ச்.,9) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது, இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மாலை 5.15 மணிக்கு துவங்கிய இக்கூட்டம் 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் தமிழகத்தின் புதிய திட்டங்கள், பட்ஜெட், நிதி ஒதுக்கீடு போன்றவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதே போல் தமிழகத்தில் புதிதாக தொடங்கும் தொழில்கள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றிற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவையும் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மீண்டும் ஆளுநருக்கு சூதாட்ட தடை மசோதா அனுப்பி வைக்க முடிவு
அப்போது அவர் கூறுகையில், இணையவழி சூதாட்டங்களை தடைசெய்தல், இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துதல் போன்ற சட்டமசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதுகுறித்து அவர் கேட்ட சந்தேகங்களுக்கு பதிலும் அளித்தோம். ஆனால் அவர் அவசர சட்டம் இயற்ற மாநிலஅரசுக்கு உரிமை இல்லை என்று கூறி திருப்பியனுப்பி விட்டார். ஆனால் மாநில அரசுக்கு உரிமை உண்டு. அதற்கு ஒப்புதல் அளித்ததும் அவர் தான் என்று கூறினார். மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைப்போம். சட்டம் இயற்ற மாநிலஅரசுக்கு உரிமையுண்டு என்றுகூறி திருப்பியனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். சட்டசபையில் இதுகுறித்து விவாதிக்கும் பொழுது புதிய கருத்துக்கள் இருந்தால் அதுவும் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.