மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியை இந்தியாவின் அதிபராக்கும் ஓர் சதித்திட்டமாக தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினை செயல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்த 'INDIA'வின் 3 ஆலோசனை கூட்டங்களை கண்டு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால் தான் பாஜக அரசு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தினை கூட்டியுள்ளது. இந்திய அதிபராக நீடிக்க வேண்டும் என்னும் காரணத்தினால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் சதி திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தலை தற்போது அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மத்திய ஆய்வு குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்பாட்டினால் அதிமுக பலியாகும். அது தெரியாமல் அவர்கள் இதனை ஆதரிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், "யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வந்து விட கூடாது என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். INDIA கூட்டணி என்றாலே பாஜக'விற்கு அச்சத்தால் காய்ச்சலே வந்து விடுகிறது போலும்" என்று பேசியுள்ளார். அதனையடுத்து, ஒரே நாடு ஒரே தேர்தலின் செயல்பாட்டிற்காக மத்திய அரசு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வு குழு அமைத்துள்ள நிலையில், அதில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை என்பதனையும் குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.