ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் 'நம்பிக்கை', இப்போது ஸ்டாலினின் 'உடன்பிறப்பு': OPS-இன் அரசியல் பயணம் இதுவரை
செய்தி முன்னோட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் அரங்கேறியுள்ளது. ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், இன்று முறைப்படி திமுகவில் இணைந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், தர்மயுத்தம் நடத்தி கட்சியை ஒருங்கிணைத்து தலைமை பதவியில் அமர நினைத்த OPS -இற்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றமே. அதன் பின்னர் பல வழிகளில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றும் அவர் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த OPS தற்போது எதிரணியில் இணைந்திருப்பது தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவரது அரசியல் பயணம் குறித்து ஒரு பார்வை.
பின்னணி
திமுகவில் இணைந்ததற்கான பின்னணி
கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுகவின் ஒற்றை தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் (EPS) கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ், நீண்ட காலமாக சட்ட போராட்டங்களை நடத்தி வந்தார். சமீபத்தில், டிடிவி தினகரனை தனது அணியில் சேர்த்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ மட்டும் மீண்டும் சேர்க்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்கவும், தனது அரசியல் இருப்பை தக்கவைக்கவும் 'வலிமையான சக்தியான' திமுகவுடன் இணைய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். ஓபிஎஸ் உடன் அவரது மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் குமாரும் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி, முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து ஓபிஎஸ் தெரிவித்தது இணைப்பிற்கு ஒரு முன்னோட்டம்.
தாவல்
விசுவாசம் vs அதிகாரம்
ஜெயலலிதா காலத்தில் ஒரு 'நம்பகமான மாற்று முதலமைச்சராக' வலம் வந்த ஓபிஎஸ், 2016-க்குப் பிறகு கட்சி அமைப்பின் மீதான பிடியை இழந்தார். மாறாக, எடப்பாடி பழனிசாமி அடிமட்ட நிர்வாகிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு சட்ட ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இந்த மோதல் அதிமுகவை பலவீனப்படுத்திய அதே வேளையில், ஸ்டாலின் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த உதவியது. தற்போது, வரவிருக்கும் தேர்தலில் திமுக சார்பில், ஓபிஎஸ்-க்கு மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது தென் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.