
வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வெறுப்பு பேச்சுக்களை பேசுபவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 28) உத்தரவிட்டது.
2022ஆம் ஆண்டு இதே உத்தரவு டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டது.
அந்த உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது.
எனவே, இனி வெறுப்பு பேச்சு பேசுபவர்கள் மீது தானாக முன்வந்து மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.
புகார் அளிக்கப்படவில்லை என்றாலும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
details
பாரதத்தின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: நீதிபதிகள்
மேலும், வழக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இது ஒரு கடுமையான குற்றம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், வெறுப்பு பேச்சு "நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை பாதிக்கும் திறன் கொண்டது" என்று தெரிவித்திருக்கிறது.
"பாரதத்தின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, வெறுப்பு பேச்சு பேசியவரின் மதத்தைப் பொருட்படுத்தாமல் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மேலும் தெளிவுபடுத்துகிறோம்." என்று நீதிபதிகள் இன்று கூறினர்.
வெறுப்பு பேச்சு என்பது ஒரு மதத்தையோ, இனத்தையோ இழிவாக பேசுவதாகும்.
சமூக வலைத்தளங்களில் இப்படி பேசுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.