
சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கசிந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு-சுப்ரியா சாகு
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநகரை அண்மையில் தாக்கிய மிக்ஜாம் புயலின் பொழுது எண்ணூர்-கொசஸ்தலையாற்றில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி பரவியது.
இப்பரவலால் சுற்றுசூழல் மற்றும் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்திய கடற்படை கச்சா எண்ணெய் பரவிய கடற்பகுதியினை ஹெலிகாப்டரில் ஆய்வுச்செய்தது.
அதில் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரையில் சுமார் 20 சதுர கி.மீ.,பரப்பளவிற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடக்கிறது.
இந்நிலையில், இப்பணிகளை ஆய்வுச்செய்ய சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு, மீன்வளத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து படகில் சென்றுள்ளார்.
ஆய்வு
90% சுத்தம் செய்யப்படாமல் எண்ணெய் தேங்கியிருப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'சென்னை எண்ணூர் அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றில் கசிந்திருந்த எண்ணெய் படலம் அகற்றும் பணி நிறைவு பெற்றது' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அலையாத்தி காடு சார்ந்த பகுதிகளில் எண்ணெய் அகற்றும் பணியானது நாளை(டிச.,22)துவங்கவுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் எண்ணெய் கசிவு மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெட்டுக்குப்பம் என்னும் பகுதியில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இக்கூட்டத்திற்கு சுப்ரியா சாகு தலைமை வகித்தார்.
அப்போது இவரிடம் அப்பகுதி மீனவர்கள், ஆற்றில் மீன்களை பிரிக்கும் விதமாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, 'ஆற்றில் எண்ணெய் படலம் வெறும் 10% மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதி 90% சுத்தம் செய்யப்படாமல் எண்ணெய் தேங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.