Loading...
அசாமில் ஆயில் இந்தியா நிறுவன ஆலை வெடிவிபத்து: ஒருவர் பலி, 6 தொழிலாளர்கள் காயம்
அசாமில் ஆயில் இந்தியா நிறுவன ஆலையில் வெடிவிபத்து

அசாமில் ஆயில் இந்தியா நிறுவன ஆலை வெடிவிபத்து: ஒருவர் பலி, 6 தொழிலாளர்கள் காயம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
04:37 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டம் தெங்காட் பகுதியில் அமைந்துள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இடைநிலை டேங்க் ஃபார்மில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட பயங்கரத் தீ மற்றும் வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை சுமார் 9:05 மணியளவில் டேங்க் ஃபார்மில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

விவரம்

விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் பலியானவர் விவரம்

இடிபாடுகள் மற்றும் தீக்காயங்களால் உயிரிழந்தவர், மும்பையைச் சேர்ந்த ஸ்பெக்ட்ரான் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியரான ராஜு தத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களில் தாபஸ் கோகோய் (40), சைலேன் கோகோய் (45), குமுத் கோகோய் (38), கோலாப் தத்தா (58) மற்றும் இந்திரா கோகோய் (40) ஆகிய 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக மீட்புக் குழுவினரால் திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் ஆயில் இந்தியா நிறுவன மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து விவரங்கள்

விபத்து நடந்தது எப்படி?

கச்சா எண்ணெய் சேமிப்புப் பிரிவில் அமைந்திருந்த முக்கிய வால்வு ஒன்றை தொழிலாளர்கள் இயக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீவிரமாக போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT