சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள்
நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்திருக்கின்றன இஸ்ரோவும், இந்தியாவும். இந்தியாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர். 2019-ல் சந்திரயான் 2வின் தோல்வியைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுமே சோகத்தில் மூழ்கியது. அந்தத் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின்பு கிடைத்திருக்கும் சந்திரயான் 3யின் வெற்றி இந்திய மக்களை கடும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயரிட விரும்பும் பெற்றோர்கள்:
இந்தியாவே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இந்த வேளையில், ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் அமைந்துள்ள கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்ட, அக்குழந்தைகளின் பெற்றோர்கள் விரும்பியிருக்கின்றனர். சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய சில நிமிடங்களில் தங்களுடைய குழந்தைகள் பிறந்ததால், இந்தியாவில் இந்த மகிழ்வான தருணத்தில் பங்கெடுத்துக் கொள்ள தங்கள் குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்ட விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது பாரம்பரியப்படி, ஒரு குழந்தை பிறந்த 21வது நாள் பெயர் சூட்டுவது வழக்கமாம். எனவே, 21-ம் நாளில் தங்களது குழந்தைகளுக்கு சந்திரயான் என்ற பெயரையே சூட்டவிருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.