கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
விருதுநகர் மாவட்டம் அரசக்குளம் பகுதியினை சேர்ந்த கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசக்குளத்தில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோயில் திருவிழா நடக்கையில் நீதிமன்ற உத்தரவினைமீறி ஆபாசநடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவானது நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருவிழாவில் ஆபாசநடனம் நடந்தது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோப்பதிவுகளை சமர்ப்பித்தார். இதனைக்கண்ட நீதிபதி கோயில் திருவிழாவில் இவ்வளவு மோசமான ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதித்தது யார் என்றும், இந்த நடனம் அரங்கேறியபோது காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு
இதற்கு அரசு தரப்பில், ஆபாச நடனம் ஆடியதன் தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல் தகவல் அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. இதனை பார்த்த நீதிபதி, "கோயில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்த புகாருக்கு சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த விவகாரத்தில் விழா ஏற்பாடு செய்தவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுத்து அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, இதன் விசாரணையினை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.