543 வகை புற்றுநோய் மருந்துகளின் விலை 93% வரை குறைப்பு: நவம்பர் 9 முதல் புதிய விலை அமல்
செய்தி முன்னோட்டம்
புற்றுநோய் சிகிச்சைக்கான 543 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் குறைத்து உத்தரவிட்டுள்ளது. வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்ததன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலை மாற்றங்கள் வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மருந்துகளின் அசல் உற்பத்தி விலைக்கும் கடைகளில் விற்கப்படும் சில்லறை விலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. "ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்குச் சாதகமாக செயல்படுகிறதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அரசு 30% லாப வரம்புக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தியது.
மருந்துகளின் விலை
93% வரை குறைந்த முக்கிய மருந்துகளின் விலை
இப்புதிய உத்தரவின் மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளின் விலைகள் 70 முதல் 93 சதவீதம் வரை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
மார்பகப் புற்றுநோய்க்கான பால்போசிக்லிப் மருந்தின் ஒரு பாக்கெட் விலை ரூ. 40,421-லிருந்து ரூ. 2,720 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கீமோதெரபிக்கு பயன்படும் தியோடெபா ஒரு குப்பியின் விலை ரூ. 80,072-லிருந்து ரூ. 7,150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
டசாடினிப், லென்வாடினிப், அபிராடெரோன், ஒலாபரிப் உள்ளிட்ட மருந்துகளின் விலைகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில், கீட்ரூடா(ரூ. 2,16,500), Ribociclib (ரூ. 24,435) மற்றும் டாக்ரிசோ போன்ற சில காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்துகளின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மிச்சம்
ஆண்டுக்கு ரூ. 2,500 கோடி மிச்சமாகும்
இந்த விலை குறைப்பு நடவடிக்கை மூலம் புற்றுநோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 2,500 கோடி வரை மருத்துவச் செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கதிர்வீச்சு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமனை செலவுகளும் குறைக்கப் பட்டால் மட்டுமே நோயாளிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.