LOADING...
தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்
ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்

தமிழகத்தில் பத்திரப்பதிவில் புதிய மாற்றம்: ரெஜிஸ்ட்ரேஷன் முடித்த ஒரே நாளிலேயே EC-ஐ மொபைலிலேயே பெறலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 19, 2025
09:39 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு பதிவுத்துறையில் முக்கிய முன்னேற்றமாக, சொத்து பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், கிட்டத்தட்ட ஒரே நாளில் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate) தொடர்புடைய நபரின் மொபைல் போனுக்கு SMS மூலமாக அனுப்பப்படும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய 'ஸ்டார் 2.0' (STAR 2.0) சாப்ட்வேர் செயலியில் இந்நவீனமைப்பு இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், தற்போது பத்திர பதிவுகள் நடைபெற்ற நாளிலேயே, வில்லங்க சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும். தற்போது உள்ள நடைமுறைப்படி, பத்திர பதிவுக்குப் பின்னர் வில்லங்க சான்றிதழ்களை பெற சில நாள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

தகவல்

பதிவுத்துறை அதிகாரிகள் கூறியது என்ன?

"பத்திரம் பதிவு செய்யும் போது அதற்கான தகவல்கள் உடனே தரவுத்தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன்பின், அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது. அந்த SMS-ல் இருக்கும் இணையதள லிங்கை கிளிக் செய்தால், அந்த சொத்துக்கு சமீபத்தில் செய்த பரிமாற்றம் பற்றிய வில்லங்க சான்றிதழை இலவசமாகப் பெற முடியும்." இந்த சான்றிதழின் இணைப்பு 30 நாட்கள் செல்லுபடியாக இருக்கும். மக்கள் இதனை சொத்து வரி, மின்சாரம் மற்றும் நீர் இணைப்பு பெயர் மாற்றங்களைச் செய்ய பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி அலைச்சலை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.