இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இனி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரக் காப்பீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்". "ஏற்கனவே பல குடும்பங்கள் உள்ளன. மற்றும் அத்தகைய குடும்பங்களில் மூத்த குடிமக்கள் இருந்தால், கூடுதல் கவரேஜ், டாப்-அப் கவரேஜ் ரூ.5 லட்சமாக இருக்கும்" எனத்தெரிவித்தார்.
பயனாளிகளுக்கு தனி அடையாள அட்டை
நாட்டிலுள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்று அமைச்சர் கூறினார். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு புதிய தனி அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் கூற்றுப்படி, மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS), ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்(CAPF) தங்களின் தற்போதைய திட்டத்தை தேர்வு செய்யலாம் அல்லது AB-PMJAY ஐ தேர்வு செய்யலாம்.